My Daily Strength

கர்த்தருடைய பிரசன்னம் உங்களுக்குள் இருக்கின்றது -- Rev. Dr. ஜெ. சாமுவேல் சுதாகர்

இன்றைய தியானம் : 'கர்த்தர் யோசேப்போடே இருந்தார், அவன் காரியசித்தியுள்ளவனானான்' ஆதியாகமம் 39:2

உங்களுக்குள் இருக்கும் தேவனுடைய பிரசன்னம் உங்களைப் பாக்கியவனாக மாற்றுகின்றது. தேவனுடைய பார்வையில் நலமான காரியங்களைச் செய்தாலன்றி கர்த்தர் உங்கள் பேரில் பிரியமாயிருக்கமுடியாது.

கர்த்தர் யோசேப்போடே இருந்தார். அவன் தனது காரியங்கள் எல்லாவற்றிலும் வெற்றிபெறுகிறவனாயிருந்தான். கர்த்தர் ஏன் யோசேப்போடே இருந்தார்? காரணம் அவன் தீமையை விட்டு விலகியோடினான். தனது வாழ்க்கையில் தேவனுக்கு முதலிடம் கொடுத்தான். தேவன் ஒருவரே அவனுடைய நோக்கமாகவும் முன்னுரிமையாகவும் இருந்தார். தேவனைத் தவிர அவன் வேறு எதையும் தேடவில்லை. நாடவும் இல்லை.

இன்று உங்கள் வாழ்க்கையைச் சற்றே ஆராய்ந்து பாருங்கள். நீங்கள் உண்மையாகவே தேவனுடைய வார்த்தையைப் பின்பற்றுகிறீர்களா என்பதைச் சோதித்தறியுங்கள். இன்று அநேகருடைய வாழ்க்கை தோல்வியில் முடிவுறுகின்றது. தேவனுக்குக் கீழ்ப்படியாமல் பாவச் செயல்களுக்கு இடங்கொடுப்பதே அதற்குக் காரணமாகும்.

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே, இந்த உலகில் நீங்கள் கையிட்டுச் செய்யும் எல்லாவற்றிலும் செழித்தோங்கவேண்டும் என்பதற்காகவே தேவன் உங்களைத் தெரிந்தெடுத்தாரே அன்றி நீங்கள் வறுமையில் வாடவேண்டும் என்பதற்காக அல்ல. அவர் உங்கள் மேல் கொண்டிருக்கும் அன்பிற்காக நீங்கள் என்ன ஈடு செய்யப்போகிறீர்கள்?

யோசேப்பு இதற்கான இரகசியத்தை கற்றுக்கொண்டிருந்தான். தேவனே தன்னை நடத்துகிறார் என்பதை அறிந்திருந்த அவன் எப்பொழுதும் அவரையே நோக்கிப் பார்த்துக்கொண்டிருந்தான். உபத்திரவத்தின் குகையிலிருந்து கர்த்தர் அவனைத் தெரிந்தெடுத்திருந்தாலும் தேவனுக்குப் பிரியமாய் வாழ்ந்ததின் மூலம் அவன் அவைகளையெல்லாம் ஜெயித்தான். நீங்கள் ஒவ்வொருவரும் யோசேப்பைப் போல் அவருக்குப் பயந்து பரிசுத்தமாய் வாழவேண்டுமென்று கர்த்தர் விரும்புகிறார். ஆத்துமாக்கள் அனைத்தும் அவருக்குச் சொந்தமாக மாறவேண்டுமென்று அவர் வாஞ்சிக்கிறார்.

அன்பான சகோதரனே சகோதரியே இந்த தியானப்பகுதியை நீங்கள் வாசிக்கின்ற வேளையில் அவருக்குப் பிரியமாய் வாழ்ந்து உங்கள் வழிகளையெல்லாம் அவருக்கு ஒப்புக்கொடுக்கத் தீர்மானியுங்கள். உங்களைச் சுற்றிலும் நெருங்கி நிற்கும் பாவங்களை வெறுத்து ஒதுக்குங்கள். பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள். அப்பொழுது அவன் உங்களை விட்டு ஓடிப்போவான்.

ஜெபம் : கர்த்தாவே, நான் எப்பொழுதும் உம்மோடு நடந்து முன்மாதிரியாய் வாழுவேன். ஆமென்.


சிந்திக்க : அனுதினமும் ஆண்டவரோடு நடப்பது நித்திய ஜீவனுக்கு வழிகோலும்.